“யுத்தத்தை முடிவுக்குக் கொண்ட வந்தவர் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டை சொந்தம் கொண்டாட முடியாது. இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.நிந்தவூரில் இடம்பெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆரிப் சம்சுடீன் மேலும் தெரிவித்த தாவது:-
ஜனாதிபதியின் இந்த வெற்றி கொண்டாடக் கூடியதும், எமது மனங்களில் இருந்து அகல முடியாததும் ஆகும். நாம் எல்லோரும் சுனாமி போன்று அலைதிரண்டு ஒட்டு மொத்தமாக மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித் தோம். இதனால் நாம் எல்லோரும் அவரின் ஆட்சியின் முக்கிய பங்கினை வகித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல்வாதிகளுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காகத்தான் அரசியல் தலைமைகள் இயங்க வேண்டும் என்பதனை நன்றாக தெளிவுபடுத்தி அரசாட்சியை நாம் தெரிவு செய்துள்ளோம்.
ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து எமது நாட்டை மீட்டுள்ளோம். நாட்டின் வளங்களை உறிஞ்சிக் கொண்டு அட்டைகள் போன்று அவர்கள் இருந்தனர். எமது வாழ்க்கைச் செலவினை அதிகரித்துக் கொண்டிருந்தனர். எம்மை பட்டினிச்சாவை நோக்கி தள்ளக்கூடிய ஒரு ஆட்சியை நடத்தினர். அவர்களைத் தள்ளிவிட்டதால் எல்லோருக்கும் சம உரிமை கிடைத்துள்ளது. ஒரு இனம் இன்னொரு இனத்தினை அடக்கியாள முடியாது. எல்லா இனங்களும் சம உரிமையோடு வாழ வேண்டும் இதனைக் கடைப்பிடிக்கும் தலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
எமது வாழ் நாள் முழுக்க இந்த வெற் றியை நினைத்துப் பார்க்க வேண்டும், இந்த மாற்றத்தினை ஏற்படுத்தியதன் மூலம் எமது எதிர்கால சந்ததியினருக்குப் பொருத்தமான மாற்றத்தினை ஏற்படுத்தி யிருக்கின்றோம். அவர்களுக்கு எதனை நாங்கள் விட்டு செல்ல இருக்கின்றோம் என்னும் விடயத்தை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சர்வாதிகார ஆட்சி இனங்களுக்கிடையே முறுகல்களை தோற்றுவித்ததுடன் இனவாத இயக்கத்தினை உருவாக்கியது. அது இரண்டு வருடங்களுக்குள் அசுர வளர்ச்சியடைந்தது. பெரும்பான்மை வாக்குகளை தாங்கள் தொடர்ந்தும் அனுபவிக்க வேண்டும்.
பெரும்பான்மை மக்கள் ஒரு குடும்பத்தைத் தவிர வேறு எவருக்கும் வாக்களிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் செயற் பட்டனர். சிறுபான்மையினரின் வாக்குகளைப் புறந்தள்ளிவிட்டு அவர்களை அடக்கி ஆளுவதன் மூலம் பெரும் பான்மை இனத்தின் மத்தியில் இயக்கங்களை தோற்றுவித்தனர். அதன் மூலம் சிறுபான் மையினரை அச்சத்திற்கு உட்படுத்தி பெரும்பான்மை ஆட்சியை நிறுவலாம் என்கின்ற கனவு காணப் பட்டது. அக்கனவு இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் எல்லோரும் பெரும்பான்மை சமூகத்தைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால் சிங்கள பிரதேசங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்த வாக்குகளைப் பெறவில்லை. சிங்கள மக்களால் 2010 இல் கொடுக் கப்பட்ட பெரும்பான்மை வாக்குகள் இம்முறை கொடுக்கப் படவில்லை. பொதுபலசேனா எந்த நோக்கத்திற்காக தோற்றுவிக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறவில்லை. சிங்கள மக்களின் பெருந்தன்மையினால் அந்த எண்ணம் முறியடிக்கப்பட்டது. எல்லா இனங்களும் சரி சமமானது என்கின்ற அபிப்பிராயத்தின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன சார்பில் முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஏற்றுக்கொண்டு சிங்கள மக்கள் மைத்திரி பால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள்.
நடந்தேறிய ஜனாதிபதித் தேர்தலில் எமது தலைமைத்துவங்கள் முடிவெடுக்க தாமதித்தாலும், எமது சமூகம் தீர்க்கமான முடிவினை எடுத்திருந்தது என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘அராஜக ஆட்சிக்கு அடிபணிய மாட்டோம், ஜனநாயக விரோத சக்திகளுக்கு நாம் அடி பணிய மாட்டோம், நாட்டிலும் பிரதேசத்திலும் ஜனநாயகம் உருவாக்கப்பட வேண்டும், ஊழல் அற்ற ஆட்சி அமையப் பெற வேண்டும், சுயாதீன குழுக்கள் அமையப்பெற வேண்டும், பொலிஸ் நிர்வாகம் சுயாதீனமாக இடம்பெற வேண்டும், நீதி நிர்வாகம் சுயாதீனமாக இடம்பெற வேண்டும், பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும், ஒரு குடும்பத்திடம் அல்லது ஒரு தனி நபரிடம் அதிகாரங்கள் குவிக்கப்படக் கூடாது என்கின்ற மனத் துணிவோடு மக்கள் காணப் பட்டார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் எதனை நாம் அனுபவித்துக் கொண்டிருந்தோம் இந்நாட்டில் வெளிப்படையான ஒப்பந்தங்கள் ஏதாவது நடைபெற்றனவா ஆனால் வெளிப்படையான ஊழல் மிக்க ஒரு ஆட்சியினையே நாம் அனுபவித்துக் கொண்டிருந்தோம். எனவே இவையெல்லாம் களையப்பட்டு மக்களுக்குப் பொறுப்புக் கூறும் தலைமைத்துவத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஜனாதிபதி, மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்கள் நன்றி கூறும் விழா கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிநபர் வகிபாடு என்கின்ற கொள்கைப் பிரகடனத்துடன் இருந்திருந்தார். நாடு அவருக்குச் சொந்தம், அவர் நாட்டிற்கு சொந்தம் என்கின்ற நிலைமைகளை நாம் கண்டு கொண்டிருந்தோம்.
அவர் யுத்தத்தினை முடிவுக்குக் கொண்டு வந்தது உண்மையாக இருக்கலாம். ஆனால் அவர் அதற்காக நாட்டினை சொந்தம் கொண்டாட முடியாது. அவருக்கு நாடு பொது சேவகம் புரிய முடியாது. ஒருமுறை ஆட்சி வழங்கப்பட்ட போது தமிழ் மக்களுக்கும் அவர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று நாம் விரும்பியிருந்தோம்.முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். சிறுபான்மை சமூகம் மதிக்கப்பட வேண்டும். இனங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்கான சூழலை முன்னாள் ஜனாதிபதி ஏற்படுத்துவார் என்ற ஒரே ஒரு நம்பிக்கையில் 2010 ஆம் ஆண்டு அவருக்கு வாக்களித்தோம். ஆனால் என்ன நடந்தது மீண்டும் சிறுபான்மை இனம் அடிமைப் படுத்தப்பட்டு மீண்டும் பேரினவாதக் கொள்கைகள் தலைவிரித்தாடின. ஆனால் மைத்திரி ஆட்சியில் அவை முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதனை நாம் இன்றும் நாளையும் ஏன் தொடர்ச்சியாகவும் கொண்டாடுவோம்.”
0 comments:
Post a Comment