இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ள விசாரணை பலமாக்கப்படுமெனவும் அரசின் மீது நம்பிக்கை வைக்குமாறும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் இக் கருத்து தொடர்பில் எதிர்த்தரப்பினரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிட்டதாவது,
இலங்கையில் இடம்பெற்றது சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அல்ல. முப்பது வருட காலம் இந்த நாட்டின் ஒற்றுமையினை சீரழித்த பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டமே. இதில் தமிழ், முஸ்லிம் சமூகம் முழுமையாக பாதுகாக்கப்பட்டதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பயங்கரவாதத்தினை ஆதரிக்கும் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தும் ஒரு சிலர் அரசியல் ரீதியில் வடக்கினை பிரித்து புலிகளின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றனர். இவர்களே பயங்கரவாதிகளுடனான போரினை சாதாரண மக்களுடன் போராடியதாகவும் மனித உரிமைகளை எமது அரசாங்கம் மீறியதாகவும் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர்.
வடமாகாணத்தில் மக்களின் விருப்பங்கள் வேறு. அங்குள்ள அரசியல் தலைமைகளின் எதிர்பார்ப்பு வேறு. நாட்டை பிரிவினைக்கு தள்ளும் கூட்டமைப்பு உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் புலம்பெயர் புலி அமைப்புக்களின் தேவையினையும் எதிர்பார்ப்புக்களையும் பூர்த்தி செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டு அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. சர்வதேசம் வலியுறுத்தி வரும் போர்க் குற்ற விசாரணைக்கு நிகராக உள்ளக விசாரணைப் பொறிமுறையினை பலப்படுத்துவது சர்வதேசத்தின் தேவையினை பூர்த்தி செய்யும் ஒரு வழிமுறை மட்டுமே. இலங்கையில் இராணுவத்தினை குற்றவாளியாக நிரூபிக்க முன்னைய எமது அரசாங்கத்தினை குற்றவாளிகளாக்கி அனைவரையும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தவே இவர்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன துணை போவாரா? என்பது சுதந்திரக் கட்சியின் சார்பில் எம் அனைவருக்கும் எழுந்துள்ள கேள்வியே.
எனவே நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தினை மனித உரிமை மீறல்கள் என சித்தரித்து சிங்கள தமிழ் மக்களின் நல்லுறவினை முழுமையாக சீரழித்து விட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment