அரசியல் வரலாற்றின் சாதனை


லங்கையின் அரசியல் வரலாற்றில் 2015 ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல மாற்றங்கள் நிகழ்ந்த ஆண்டாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

எவராலும் தோற்கடிக்க முடியாது என்று நம்பப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்ததும் 37 வருடங்களாக பேசப்பட்டு வந்த நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதும் இந்த வருடத்திலேதான். இந்த இரண்டு விடயங்களுக்கும் ஒன்றோடு ஒன்று தொடர்பிருப்பது மற்றொரு விசேட அம்சம் எனலாம்.

ஜனவரி 08 ஆம் திகதி இலங்கை அரசியலில் மாற்றம் நடக்குமா நடக்காதா என முழு நாடும் பரபரப்போடு எதிர்பார்த்திருந்தனர். அதே நிலைதான் 19 ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பிலும் காணப்பட்டது. தேர்தல் முடிவுக்காக கண்விழித்தது போன்று 19 ஆவது திருத்தத்தின் முடிவை அறிய நள்ளிரவு நெருங்கும் வரை காத்திருக்க நேரிட்டது.
உலகில் அநேக நாடுகளில் ஜனாதிபதி முறை காணப்பட்டாலும் இலங்கையில் போன்று ஜனாதிபதிக்கு வரையறையற்ற அதிகாரம் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளில் கூட கிடையாது என்பதே உண்மை.

5/6 பெரும்பான்மை பலத்துடன் கூடிய ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசு 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய அரசியலமைப்பிலே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கொண்டுவரப்பட்டது. அன்று முதல் இன்றுவரை அறுவர் நிறைவேற்று ஜனாதிபதிகளாக பதவி வகித்திருக்கிறார்கள். ஜே.ஆர். ஜெயவர்தன இரு தடவைகளும் ஆர். பிரேமதாஸ ஒரு தடவையும், சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலா இரு தடவைகளும் இந்தப் பதவியை வகித்த அதேவேளை இறுதியாக மைத்திரிபால சிறிசேன 6 ஆவது ஜனாதிபதியாக மக்களால் இந்த ஆசனத்தில் அமர்த்தப்பட்டார்.

ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப் பட்ட 37 வருட காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே கூடுதலான காலம் இந்த பதவியை வகித்திருக்கிறது. ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என போராட்டம் கூட 1978 முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினாலே ஆரம்பிக்கப்பட்டது என்பது மற்றொரு முக்கிய விடயமாகும்.

1978 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய அநுர பண்டாரநாயக்க, ஹலீம் இசாக், ஆனந்த தசநாயக்க, ஆர்.பி. விஜேசிரி மற்றும் மைத்திரிபால சேனநாயக்க ஆகியோரே இந்தப் போராட்டத்தில் ஆரம்ப காரண கர்த்தாக்களாக வரலாற்று ஏடுகளில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

அன்று முதல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக கூறியே தேர்தலில் களமிறங்கியிருந்தார்கள்.

ஆனால் ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த எவருமே அந்த வாக்குறுதியை நிறைவேற்றியது கிடையாது என்பதே வரலாற்று உண்மையாகும்.

1994 ஆம் ஆண்டில் தேர்தலில் போட்டியிட்ட சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதி முறையை ஒழிக்க காலக்கேடு கூட விதித்திருந்தார். மூன்று தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ தனது ஒவ்வொரு தேர்தல் விஞ்ஞாபனத்திலும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதியளித்திருந்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையிலுள்ள வரையறையற்ற அதிகாரங்கள் காரணமாக அந்த அதிகாரத்தை கைவிட எவரும் விரும்புவதில்லை என ஒரு தடவை ஜே.ஆர். ஜெயவர்தன (ஜனாதிபதியாக பதவி வகிக்காத போது) கூறியிருந்தார். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் கணிப்பு முதற்தடவையாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொய்யாக்கப்பட்டிருக்கிறது.

ஜனவரி 8 ஆம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் இரு பிரதான வேட்பாளர்களும் ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு உறுதியளித்திருந்தாலும் அதுவும் மற்றொரு வாக்குறுதியாகவே காற்றில் பறக்கும் என பலரும் நினைத்தார்கள். இது தொடர்பில் பல்வேறு ஊகங்களும் தெரிவிக்கப்பட்டன. அவை அனைத்தும் கடந்த 28 ஆம் திகதி நள்ளிரவுடன் பொய்யாகியது. 224 பாராளுமன்ற உறுப்பினர்களில் (சபாநாயகர் தவிர) 212 பேரின் ஆதரவுடன் 19 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறியிருக்கிறது.

இலங்கை பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் 19 தடவைகள் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு திருத்தப்பட்டிருக்கிறது. இதில் 3 தடவைகளே ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது என்பது முக்கிய அம்சமாகும். 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் மற்றும் 17 ஆவது திருத்தச் சட்டங்களினூடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன. முதற்தடவையாக ஜனாதிபதிக்குரிய கூடுதல் அதிகாரங்கள் 19 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக குறைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டின் தலைவரான ஜனாதிபதிக் கிருக்கும் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் போராட்டமும் அவ்வப்போது தலை தூக்குவதற்கு பல்வேறு விடயங்கள் காரணமாக அமைந்திருந்தன. ஜனாதிபதி முறையிலுள்ள எல்லையற்ற அதிகாரங்களை பயன்படுத்தி ஆட்சியிலிருந்த ஜனாதிபதிமார் மேற்கொண்ட அநீதிகள் மற்றும் அராஜகங்கள் இந்த முறை மீதான மக்களதும் சமூக அமைப்புகளினதும் வெறுப்பிற்கு காரணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.

ஜனாதிபதியொருவர் என்ன தவறு செய்தாலும் அவரை நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியாது என்ற விடுபாட்டுரிமை காரணமாக நிறைவேற்று ஜனாதிபதி முறை தவறாக பயன்படுத்த ப்பட்ட சந்தர்ப்பங்கள் அநேகம். நீதிமன்றங்களினால் தண்டிக்கப்பட்ட மோசமான குற்றவாளிகள், பாதாள உலக நபர்கள், போதைப் பொருள் கடத்தல் காரர்கள் போன்றோர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் கடந்த 37 வருட காலத்தில் பல தடவைகள் நடந்திருக்கிறது.

இரு வேறு கட்சிகள் பாராளுமன்ற அதிகாரத்தையும் ஜனாதிபதி அதிகாரத்தையும் வகிக்கும் சந்தர்ப்பத்தில் நினைத்தவாறு பாராளுமன்றம் கலைக்கப் பட்ட மோசமான முன்னுதாரணமும் நிறைவேற்று அதிகாரத்தின் பலனாகவே இடம்பெற்றது.

நிர்வாகம், பொலிஸ், நீதி என சகல துறைகளிலும் நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு பல்வேறு காலங்களிலும் காணப்பட்டது நாடறிந்த ரகசியம். அமைச்சர்கள் அரச நிறுவன பிரதானிகள் நியமிக்கையில் தகைமையை விட தலையாட்டி பொம்மையாக இருப்பதும் நெருக்கமானவராக இருப்பதுமே முக்கிய தகைமையாகக் கருதப்பட்டது.

இந்த நிலையில் ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற தொடர்ச்சி யான கோரிக்கை நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் துளிர்த்துள்ளது. ஜனாதிபதியின் உச்ச அதிகாரங்களில் சில 19ஆவது திருத்தத்தினூடாக ஒரு சில அதிகாரங்கள் தற்பொழுது மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.

தனக்கு நினைத்தவாறு சர்வாதிகாரப் போக்குடன் நடக்கும் ஜனாதிபதி இனி இலங்கையில் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் புதிய திருத்தத்தின்படி ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக் கூற வேண்டும். 6 வருடங்கள் என்ற ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

18ஆவது திருத்தத்தினூடாக ஜனாதிபதி ஒருவருக்கு எத்தனை தடவையும் போட்டியிட முடியும் என்று கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் ரத்துச் செய்யப்பட்டு 2 தடவைகளுக்கு முன்பு போன்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதிக்குரிய விடுபாட்டு உரிமையும் ஓரளவு குறைக்கப்பட்டு அவருக்கெதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தொடர அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை ஒரு வருடத்தில் கலைக்க முடியும் என்ற பிரிவு அகற்றப்பட்டு 4 1/2 வருடங்களின் பின்னரே கலைக்க இடமளிக்கப்பட்டுள்ளது.
அவசர சட்டங் கள் கொண்டு வருவதும் புதிய திருத்தத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. இவை பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பலப்படுத்தும் வகையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

இவை தவிர அரசியலமைப்பு சபை யொன்று ஸ்தாபிக்கப்படும் அதே வேளை சுயாதீன அரச சேவை ஆணைக்குழு, பொலிஸ் சேவை ஆணைக்குழு, மனித உரிமை ஆணைக்குழு லஞ்ச ஊழல் ஆணைக்குழு, நிதிச் சேவை ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக் குழு, தேசிய கேள்விமனு ஆணைக்குழு, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு மற்றும் மொழிகள் ஆணைக்குழு என்பவற்றையும் அமைக்க 19 ஆவது திருத்தம் வழி வகுத்துள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதியின் உச்ச அதிகாரங்களில் 10 வீதம் கூட 19 ஆவது திருத்தத்தினூடாக குறைக்கப்படாத போதும் இந்த ஆரம்பம் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் பட்டுவிட்டதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஜனாதிபதிக்கு இருக்கும் ஏனைய தேவையற்ற அதிகாரங்களும் குறைக்கப்பட வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகும்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment