பாராளுமன்ற ஜனநாயகத்தை மீளுறுதி செய்திருக்கும் ஜனாதிபதி

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட 19வது திருத்தம் நேற்று முன்தினமிரவு இலங்கைப் பாராளு மன்றத்தில் 213 வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதை, அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்துக்கு சூட்டப்பட்ட மகுடம் என்று அழைப்பதைவிட இலங்கை மக்களின் ஜனநாயக உரிமை களின் பேரில் சூட்டப்பட்ட அலங்கார மகுடம் என்று விளிப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு, அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலை குறைப்பு, காணி விடுவிப்பு, நாட்டின் செல்வத்தை கொள்ளையிட்டோர் மீது நடவடிக்கை எனப் பல நூறு நாள் வேலைத்திட்டங்கள் கடந்த மூன்று மாத காலப் பகுதியில் நிறைவேற்றப்பட்டு வந்த போதிலும், மக்களின் ஜனநாயக சுதந்திரத்தை நிலை நிறுத்தி, நாட்டில் சட்டத்தின் ஆட்சி யையும், ஜனநாயக அரசியல் மாண்பையும் பேணிப் பாதுகாக்கும் வகையில் அமைந்திருக்கும் 19வது அரசியல் திருத்தச் சட்டமே இவற்றுக்கெல்லாம் மகுடமாக அமைந்திருக்கிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் சாதுவைப்போலத் தோற்றம் மளித்தாலும் நினைப்பதை நடத்தியே முடிக்கும் அரசியல் சாணக் கியம் கொண்டவர் என்பதை ஐயம்திரிபட நாட்டு மக்களிடம் நிரூபித்திருக்கிறார்.

இயற்கை எல்லா விடயங்களிலும் ஒரு சமநிலையைப் பேணிவரும் இயல்பு கொண்டது. ஐரோப்பாவையே மத்திய காலத்தில் உலுக்கி எடுத்த பிளேக் நோய் ஒரு கட்டத்தில் மங்கி மறைந்து, சனத் தொகை மீண்டும் அந்நாடுகளில் வளர்ச்சி பெற்றது. பிளேக் நோய் க்கு இறுதிவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லையாயினும் எலிகள் பல்கிப் பெருகுவதற்கான வாய்ப்புகளை எப்படிக் குறைப்பது என்பதை மக்கள் தெரிந்து கொண்டனர்.

சர்வாதிகாரி ஹிட்லர் முழு உலகையுமே வெற்றி கொண்டு விடலாம் என்ற அச்சம் உலகையே கெளவியிருந்த நேரத்தில் ஜப்பானிய கடற் படை பேர்ள் துறைமுகத்தின் மீது தொடுத்த தாக்குதல், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்காவை யுத்தத்துக்குள் இழுத்தது. அதன் பின்னர் யுத்தத்தின் போக்கு நேச நாடுகளுக்கு வாய்ப்பாக அமைந்தது. ஹிட்லர் யுகம் முடிவுக்கு வந்தது.

இயற்கையின் இந்த ஆள்பாட்டுத் தத்துவத்தை வரலாறெங்கும் நாம் காணலாம். இதைத்தான் கிருஷ்ண பகவான், ‘தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் துஷ்ட நிக்றஹம் செய்து சிஷ்ய பரிபாலனத்துக்காக நான் அவதரிப்பேன்’ என்று கூறியி ருப்பதாக வேதம் சொல்கிறது.

இலங்கையில் ஜனநாயக வழிமுறைகள் படிப்படியாக விழுங்கப்பட்டு சர்வாதிகாரப் போக்கும், குடும்ப ஆதிக்கமும் மேலோங்கிய கடந்த காலத்தில் இந்நிலைக்கு ஒரு விடியல் வராதா என மக்கள் ஏங்கி நின்றனர். ஏனெனில் வங்கதேசம், பாகிஸ்தானைப் போலன்றி இந்நாட்டு மக்கள் நீண்ட நெடுங்காலமாக சுதந்திர ஜனநாயக அரசியலை மட்டுமே அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

வெள்ளை வான் கலாசாரம், அடக்குமுறை, சிறுபான்மையினரின் உரிமைகள் கெளரவப்படுத்தப்படாமை, பொலிஸ் ராஜ்யம் போன்ற ஜனநாயக த்துக்கு மாறான பண்புகள் 2010 ஆம் ஆண்டின் பின்னர் மெல்ல மெல்ல கட்டமைக்கப்பட்ட போது, இதில் இருந்து விடுபடுவ தற்கான வழி என்ன என மக்கள் சிந்திக்கத் தொடங்கிய போது தான் தன் உயிரை துச்சமாக மதித்து ஒரு தீர்க்கமான திருப்புமுனை முடிவை எடுத்தார் அன்றைய சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்திரிபால சிறிசேன.

அன்றைய சர்வ வல்லமை படைத்த ஜனாதிபதியை எதிர்க்கவும், அனைத்து ஜனநாயக ஆதரவு சக்திகளை ஒன்று திரட்டி அதற்கு தலைமைத்துவத்தைத் தரவும் அவர் மேற்கொண்ட துணிச்சலான தீர்மானமே, இலங்கை ஜனநாயகத்தை விழுங்கிக் கொண்டிருந்த சர்வாதிகாரத்தைத் தகர்த்தெறிந்தது. இந்நிலையில், ஜனதா கட்சியை அவசர அவசரமாக உருவாக்கி காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித் ததன் மூலம் இந்திய ஜனநாயகத்துக்கு புத்துயிரளித்த ஜெய் பிரகாஷ் நாராயணின் அரசியல் வியூகத்துடன் இதனை ஒப்பிடலாம்.

இதேவேளை 19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், ஜனாதிப தியின் ஆட்சிக் காலம் ஐந்து ஆண்டுகளாகக் குறைக்கப் பட்டிருப்பதோடு ஒரு ஜனாதிபதி இரண்டு தடவைகள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என வரையறை செய்யப் பட்டுள்ளது. பாராளுமன்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவராக ஜனாதிபதியின் அதிகாரங்கள் மாற்றப்பட்டுள்ளன. முன்னர் சந்திரிகா அம்மையார் காலத்தில் 17 வது திருத்தச் சட்டத்தின் பிர காரம் கொண்டுவரப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்கள் மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

ஒரு அரசு அமைக்கப்பட்டு இரண்டு வருடங்கள் கழிந்ததும் அப் பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி பெறக்கூடிய வகையில் இருந்த ஜனாதிபதியின் அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது. ஒரு அரசு பதவி யேற்ற நான்கரை ஆண்டுகளின் முடிவிலேயே அப்பாராளு மன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தை ஜனாதிபதி பெறக்கூடிய வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. தேசிய திட்டமிடல் ஆணைக்குழு நியமனம், கணக்காய்வு ஆணைக்குழு, அரசியல மைப்பு பேரவை உருவாக்கப்படுதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த திருத்தச்சட்டம் அமைந்திருக்கிறது.

விரைவிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேர்தல் மறுசீரமைப்பு ஆகியனவும் நடைமுறைக்கு வரவுள்ளன. இவற்றின் மூலம் நல்லதொரு ஆரம்பத்துக்கு ஜனாதிபதி வித்திட்டிருக்கிறார். விரைவில் நடத்தப்படவிருக்கும் பொதுத் தேர்தலின் பின்னர் அமையக்கூடிய அரசு ஜனநாயகத்தை போஷிக்கும் அதேசமயம் நாட்டை ஆரோக்கியமான துரித வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும் ஜனாதிபதியின் செயற்திட்டங்களுக்கு உந்து சக்தியளி ப்பதாக அமைய வேண்டியது அவசியம்.

ஏனெனில் பொதுமக்களுக்கு போலி ஜனநாயகத்திலும் போலியான வளர்ச்சிப் பிம்பத்திலும் சலிப்பேற்பட்டிருக்கிறது. யுத்தத்தின் பிற விளைவுகளாலும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் சமூகத்தவர்கள் தமக்கு நியாயம் கோரி நிற்கி றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க ப்பட்டு தேசிய பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணப்பட வேண்டு மென்றால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கைகள் மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப் பட்டிருப்பதை அதற்கான ஆரம்ப முயற்சியாகவே பார்க்க முடிகிறது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment