மைத்திரிபால சிறிசேன சீனா செல்லவுள்ளார்

உத்தியோகபூர்வ அரச விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மா்ர்ச் மாதம் 26 ஆம் திகதி சீனா செல்லவுள்ளார். சீன ஜனாதிபதியின் அழைப்பையேற்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதிநிதிகள் சீனா செல்கின்றனர்.
மார்ச் மாதம் 30 ஆம் திகதிவரை சீனாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் சீன ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவை பலப்படுத்துதல் மற்றும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான முதலீடுகள் குறித்து கவனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளது.
மேலும் சீனா இலங்கையில் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இந்த விஜயத்தின்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.
குறிப்பாக சீனாவினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாகவும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. தற்போதைய நிலைமையில் கொழும்பு துறை முக நகர் அபிவிருத்தி திட்டம் தொடர்பில் மீளாய்வுகள் இடம்பெற்றுவருகின்றன.
இது தொடர்பில் மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கையின் பின்னரே இந்த திட்டத்தை தொடர்வதா? அல்லது நிறுத்துவதா? என்ற விடயம் தீர்மானிக்கப்படும்.
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு செல்லும்போது கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்ட மீளாய்வு அறிக்கை தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை மார்ச் மாதம் 30 ஆம் திகதிவரை சீனாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினர் அங்கிருந்தவாறு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளனர். பாகிஸ்தானிலும் அவர் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment