வளைந்த பாதங்களை நேர் செய்ய…


பிறவியிலேயே ஏற்படும் ஊனத்தினாலும், இடையில் ஏற்படும் இளம்பிள்ளை வாதம் (போலியோ நோய்), மூளை வளர்ச்சி குறைவு போன்ற குறைபாடுகள் காரணமாகவும், சிலருக்குப் பாதங்கள் வளைந்துவிடுவதுண்டு.

இரண்டு கால்களிலும் அல்லது ஒரு காலில் மட்டும் இந்த ஊனம் ஏற்படுவதுண்டு. முற்காலத்தில் இந்தப் பாதிப்புகள் சாபம் என்றும், இதற்குத் தீர்வு இல்லை என்றும் மூடநம்பிக்கை இருந்தது. இவ்வாறு குறைபாட்டுடன் குழந்தை பெற்றெடுத்த தாயையும், குடும்பத்தையும் கூட, சமுதாயம் இழிவாகவே எண்ணியது.
வளைந்த பாதங்கள் சாபமல்ல; சரிசெய்யக்கூடியதே. பிறவியிலேயே வளைந்த பாதங்களுக்கான சரியான காரணம் கூற இயலாத. சராசரியாக ஆண், பெண்களில் 2:1 விகிதமாக இந்தப் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இரண்டு கால்களிலும் 30-50% இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இது பரம்பரை நோயாக இல்லாவிட்டாலும் இந்த ஊனம் 10% ஒரே சந்ததியில் ஏற்படுகிறது. வளைந்த பாதம் சிறிதளவு வளைவாகவோ அல்லது மிகவும் வளைந்ததாகவோ வருவதுண்டு.
போலியோ போன்ற நோய்களால் தாக்கப்படும்போது தசைகளில் உள்ள திறன் பாதிக்கப்படுவதால் பாதங்கள் வளைகின்றன.
வளைந்த பாதங்களுக்கு அடிப்படைக் காரணம், தசைகளின் செயல்பாடு என்றாலும், அதைச் சரிசெய்யாமல் விட்டுவிடுவோமேயானால், பாதங்களின் எலும்புகளும் பாதிக்கப்பட்டு வளைந்து விடுகின்றன. இதைச் சரிசெய்யாமல் தொடர்ந்து வளைந்த பாதங்களுடன் நடக்கும்போது மேலும் கால்களில் ஏற்படும் மாற்றங்கள், விகார தோற்றத்தையும் நடையில் குறைபாட்டையும் ஏற்படுத்துகிறது.
எனவே, பிறந்தவுடனேயே பாதங்கள் வளைந்து காணப்பட்டால், உடன் சிகிச்சையைத் தொடங்கவேண்டும். அவ்வாறு செய்வதால் சிகிச்சை முறை எளிதாகவும், சிகிச்சை பலன் நிறைவாகவும் இருக்கும். பச்சிளம் குழந்தைகளுக்கு உறக்கம் மற்றும் ஓய்வு நேரம் அதிகம். மேலும், நடைத்திறன் இல்லாதிருப்பதாலும் வலி உணர்வு குறைவென்பதாலும் குழந்தைப் பருவத்திலேயே இதற்கான சிகிச்சை முறைகளைத் தொடங்குவது நல்லது. காலம் தாழ்த்தும்போது சிகிச்சை முறைகளும் வேறுபடுகின்றன. சிகிச்சையின் பலனும் முழுமையாகத் தெரிவதில்லை.
மாக்கட்டுப் போட்டுச் சரி செய்யும் முறை (பான் சட்டி), கம்பிகளைக் கோர்த்து சரிசெய்யும் முறை (ஜெஸ்) மற்றும் வளையங்கள் பொருத்திச் சரிசெய்யும் (இலிஸரோவ்) முறை மற்றும் அறுவை சிகிச்சை செய்து தசை நார், மூட்டுறை மற்றும் எலும்புகளைச் சரிசெய்யும் முறை எனப் பல முறைகள் உண்டு. இருப்பினும் மாக்கட்டிலேயே சரிசெய்யும் முறை மிக உகந்ததாகக் கருதப்படுகிறது. இம்முறையில், குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு மறை மாக்கட்டைச் சிறிது சிறிதாக வளைந்த பாதங்களை நேர் செய்யுமாறு மாற்றிக் கட்டுப்படும். இந்த முறை சிகிச்சையைப் பச்சிளம் குழந்தைப் பருவத்திலேயே அளித்தல் நல்ல பலனைத் தரும்.
இந்த சிகிச்சை பலன் தராதபோதும். அல்லது மிகவும் அதிகமாக வளைந்த பாதங்கள் இருக்கும்போதும், கம்பிகளை வைத்துச் சரி செய்யும் முறைகளைக் கையாளலாம். கம்பிகள் வைத்துச் சரிசெய்யும் முறைகளில் ஜெஸ் முறை மற்றும் இலிஸாரோ முறைகள் சிறந்தவை. ஜெஸ் முறையில் நீண்ட கம்பிகள் ஙூ வடிவக் கம்பிகளுடன் இணைக்கப்பட்டுச் செய்யப்படும். இலிஸாரோ முறையில் ஙூ வடிவக் கம்பிகளுக்குப் பதிலாக வளையங்கள் வைத்துப் பொருத்தப்படுகின்றது. சரிசெய்ய இயலாதளவுக்கு ஊனமுற்ற பாதங்கள் அல்லது வளைந்த பாதங்களுடன் நடக்கும்போது எலும்புகள் உருமாறுகின்றன. அவ்வாறு கவனிக்கப்படாத குறைபாடுகளுக்கு அறுவை சிகிச்சை அவசியம் தேவைப்படுகிறது.
வளைந்த எலும்புகளை நேர்ப்படுத்தி தசை நார்களைச் சரிசெய்யும் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இவ்வாறு சிறுவயதில் கவனிக்கப்படாத பாதங்களுக்கு மேற்கூறிய அறுவை சிகிச்சை செய்யும்போது பாதங்களின் அளவில் வேறுபாடும் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.
மனிதனின் வளர்ச்சி சுமார் 19 வயது வரை நீடிக்கும். எனவே எந்த முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் தொடர்ந்து கண்காணிக்கப்படுதல் அவசியம். பாதங்களுக்கு தசைப் பயிற்சி மற்றும் சிறப்பாக உருவமைக்கப்பட்ட காலணிகள் இதற்கு உதவியாக இருக்கும்.
மேலதிக விபரங்களுக்கு:
அலைபேசி: 91 94434 51766
மின்னஞ்சல்: orthochand@rediffmail.com
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment