இது தொடர்பில் தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.நாவின்ன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.
அதன்படி, தனியார் ஊழியர் ஒருவரின் ஆகக்குறைந்த நாளாந்த சம்பளம் 400 ரூபாவாக அமையும் இதன் ஒரு கட்டமாக மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் தனியார் ஊழியர்களுக்கு 1500 ரூபா சம்பள உயர்வை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம் வருமாறு,
அமைச்சரவை தீர்மானங்கள் - 29-04-2015
01.2014/2015 பெரும்போகத்தில் நெல் கொள்வனவு (விடய இல 06)
2015 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் இன்று வரை உணவு பாதுகாப்பு அமைச்சின் மூலம் நெல் விற்பனை சபை மற்றும் கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடத்திலிருந்து 148,973 மெட்ரிக் தொன் நெல்லினை விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அதற்காக திறைசேரியின் மூலம் ரூ.7,200 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது. அது 2007 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அரசாங்கம் தலையிட்டு வழங்கியுள்ள அதி கூடிய தொகையாக கணிக்கப்படுகின்றது. இவ்வாறு உணவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்களின் மூலம் குறித்த விடயங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
02.விவசாயத் திணைக்களத்திற்கான ஒரு ஆலோசனைக் குழுவை நியமித்தல் (விடய இல 14)
விவாசய விடயம் தொடர்பில் அனைத்துத் தரப்புகளினதும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொண்டு சவால்கள் நிறைந்த தீர்மானத்தை மேற்கொள்ள நேரிடும் சந்தர்ப்பங்களில் விவசாயம் தொடர்பில் மிக முக்கியமாக குறித்த துறையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நபர்களை உள்ளடக்கிய ´விவசாயத் திணைக்களத்திற்கான ஆலோசனைக் குழு´ என்ற பெயரில் ஒரு குழுவை நியமிப்பதற்கு கமத்தொழில் அமைச்சர் கௌரவ துமிந்த திஸாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
03.உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய உள்நாட்டு நெல்லைக் கொள்வனவு செய்தல் (விடய இல 15)
நாட்டினுள் தொற்றாத நோய்கள் பரவுவதால் ஆண்டுத்தோறும் மரணிக்கும் நபர்களில் அதிகமானோர் தொற்றாத நோய்கள் பீடிக்கப்பட்டு இறக்கும் ஒரு போக்கு தற்பொழுது காணப்படுகின்றது. பாரம்பரிய பயிர்ச் செய்கை முறைகளிலிருந்து விலகி இரசாயனப் பதார்த்தங்களின் உள்ளீடுகளில் தங்கியிருக்கின்ற இன்றைய விவசாயிகளுக்கு பாரம்பரிய உணவுப் பயிர்ச் செய்கையிலிருந்து விலகியமை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பாராதீனப்படுத்தியமை என்பன தொற்றாத நோய்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் என உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சிகளிலிருந்து நிறுபிக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய உள்நாட்டு நெல் உற்பத்தியில் நெல் உற்பத்தியில் 25 இலட்சம் கிலோ கிராம் நெல்லை ஒரு கிலோவுக்கு ரூ. 80 என்ற வீதத்தில் எமது அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஹதபித அதிகார சபை, உணவு ஊக்குவிப்பு சபை, மாவட்ட விவசாயத் திணைக்களங்கள் ஆகியவற்றின் பணிப்பாளர்களின் ஊடாகக் கொள்வனவு செய்து, அதில் ஒரு பகுதி நெல்லை கிலோகிராம் ஒன்றுக்கு ரூ. 90 என்ற கணக்கில் ஆகக்கூடியது 25 கிலோ கிராம் என்ற வீதத்தில் நெல்லை விதை நெல்லுக்காக சிறுநீரக நோய் பரந்துள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அளித்து விவசாயிகளுக்கு மத்தியில் விநியோகிப்பதற்கும், எஞ்சிய நெல்லை அரிசியாக உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கும் கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
04.குற்றவியல் விடயங்களின் போது பரஸ்பர சட்டமுறையான உதவியளித்தல் பற்றிய இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு மற்றம் ரஸ்யா சமஸ்டிக் குடியரசுக்கும் இடையே ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை (விடய இல 19)
சர்வதேச ரீதியில் நடைபெறுகின்ற குற்றங்களைத் தடுப்பதற்காக குற்றவியல் விடயங்களின் போது சர்வதேச பரஸ்பர சட்ட முறையான உதவி மிகவும் முக்கியமாகிறது. 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களின் போது பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் நடைபெறுகின்ற குற்றவியல் விடயங்களின் போது இலங்கையால் அந் நாடுகளுக்கு உதவியைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் இலங்கை அந் நாடுகளிலிருந்து உதவியைப் பெற்றுக் கொள்ளல் சம்பந்தமாக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதன்படி, குற்றவியல் விடயங்களின் போது பரஸ்பர உதவியளித்தல் பற்றிய உடன்படிக்கையை இலங்கை அரசாங்கத்தால் ரஸ்யா சமஸ்டி குடியரசுடன் கைச்சாதிடப்பட்டு வலுவாக்குவதற்காக நீதி அமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
05.வட மாகாணத்தின் காட்டுச் செல்வழிகள், இயற்கை ஒதுக்கிடங்கள், சரணாலயங்கள் மற்றும் வன ஜீவராசிகள் தேசிய பூங்காக்களைப் பிரகடனப்படுத்தல் (விடய இல 20,21)
30 வருடத்திற்கு மேற்பட்ட காலம் வட மாகாணத்தில் நிலவிய யுத்தம் முடிவடைந்து அப்பிரதேசத்தில் சமாதானம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அம் மாகாணத்தின் அபிவிருத்தி அலுவல்கள் மற்றும் சூழல் பாதுகாப்பிற்காக பயன்படுத்தக்கூடிய பிரதேசங்களை இனம்கண்டு கொள்வதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு வட பிரதேசத்தில் ஒன்றிணைந்த செயல் நுணுக்க சூழல் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்நாட்டின் சூழலைப் பாதுகாத்தல், அடிப்படை வசதிகளை வழங்குதல் மற்றும் அபிவிருத்தி அலுவல்களை மேற்கொள்ளல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்ற 25 இற்கு மேற்பட்ட அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்ச்சித் திட்டத்தை மத்திய சூழல் அதிகார சபை மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் என்பன முன்னின்று மேற்கொண்டதோடு, தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப வசதிகள் இலங்கையின் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் (யுஎன்டிபி) மற்றும் ஐக்கிய நாடுகளின் சூழல் நிகழ்ச்சித் திட்டம் (யுஎன்டிபி) என்பவற்றால் வழங்கப்பட்டன. மேலும் வட மாகாண ஒன்றிணைந்த செயல் நுணுக்க சூழல் மதிப்பீட்டின் கீழ் வன சீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தினால் யானை – மனிதன் மோதலைக் கட்டுப்படுத்தல்,ஈரழிப்பு நிலத்தைப் பாதுகாத்தல், புலம்பெயர் பறவைகளின் பயன வழிப்பாதையைப் பாதுகாத்தல், உயிரியல் பல்வகைமையைப் பேணிப் பாதுகாத்தல் மற்றும் சூழல் அபிவிருத்தி அலுவல்களின் விருத்தி என்பனவற்றை மையமாகக் கொண்டு வன சீவராசிகள் ஒதுக்கிடங்களைப் பிரகடனப்படுத்தப்பட வேண்டிய பிரதேசங்கள் இனம் காணப்பட்டதுடன், தற்போதுள்ள பல ஒதுக்கிடங்களின் தரத்தை உயர்த்துவதற்கும் சரணாலயத்தின் எல்லைகளைத் திருத்தம் செய்வதற்கும் சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கௌரவ நவீன் திஸாநாயக்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
06.சர்வதேச சமுத்திர அமைப்பின் நியதிச்சட்டத்தை நிறைவு செய்வதற்குத் தேவையானவாறு 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பல் சட்டத்தைத் திருத்துதல் (விடய இல 24)
ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தமது உறுப்பு நாடுகளின் கப்பற்றுறை பணிகள் யாவும் தொடர்பில் அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ள சர்வதேச சமுத்திர அமைப்பினால் தவணை ரீதியில் கட்டாய ஆய்வுகள் இந்த நாடுகளில் மேற் கொள்ளப்படும். இந்த ஆய்வுகள் மேற் கொள்ளப்படுவது சர்வதேச சமுத்திர அமைப்பின் ஒழுங்குவிதிகளுக்கமைய கட்டாய நியதிச்சட்டமாக விதிக்கப்பட்டுள்ள மிக முக்கிய சர்வதேச நியதிச்சட்டங்களுக்கு அமைவாக அதன் உறுப்பு நாடுகள் செயலாற்றுகின்றனவா என்பது பற்றி பரிசீலனை செய்வதற்காகும். ஆதன் படி சர்வதேச சமுத்திர அமைப்பின் நியதிச்சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கும் தேவையான சட்டங்கள் உள்ளமையை உறுதி செய்யும் பொருட்டு 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க வணிக கப்பற் சட்டத்திற்கு தேவையான திருத்தங்களை மேற் கொண்டு திருத்தங்களை வரைவதற்கு துறைமுகங்கள், கப்பற்றுறை அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
07.வட மத்திய மாகாண குளங்களின் அபிவிருத்தி திட்டத்தின் முதல் கட்டத்தின் பணிகளை செயற்படுத்தல் (விடய இல 24)
மகவெலி அபிவிருத்தி வேலைத் திட்டம் 1970 ஆண்டு ஆரம்பமானதுடன், அவ்வேலைத்திட்டத்தின் கீழ் நிறைவேற்றி முடிப்பதற்கான நீரினை பகிர்ந்தளிக்கும் முதலீட்டு வேலைத்திட்டத்தை பூரணப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் மூலம் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் வட மத்திய மாகாண குள வேலைத்திட்டத்தை செயற்படுத்த அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த திட்டத்தை செயற்படுத்த தேவையான நிதியினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் ஒப்பந்தம் மேற் கொள்வதற்கு மகவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சராக தொழிற்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
08.தகவல் அறியும் உரிமை தொடர்பான சட்ட மூலம் (விடய இல 27)
கடந்த அமைச்சரவை சந்திப்பின் போது அமைச்சரவை அங்கீகாரம் அளிக்கப்பட்ட தகவல் அறிந்து கொள்ளும் உரிமை சட்ட மூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்ட போதும் அதில் உள்ளடக்கப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மூலம் முன்வைக்கப்பட்ட திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் குறித்த சட்ட மூலத்தை பாராளுமன்றத்தில் முன்வைப்பதில் கால தாமதங்கள் ஏற்படுவதால் குறித்த திருத்தங்கள் தொடர்பில் அமைச்சரவையில் ஆலோசிப்பதற்கு பிரதமர் அவர்களினால் குறித்த திருத்தங்களை உள்ளடக்கியதாக சட்ட மூலம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கும் அமைச்ரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சட்ட மூலம் மற்றும் தேசிய கணக்காய்வு சட்ட மூலம் என்பவற்றை அவசர கால சட்டமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காமல் சாதாரண சட்டமொன்று இயற்றப்படும் முறையில் சட்டமாக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
09.தனியார் துறை பணியாளர்களின் ஊதியத்தினை அதிகரித்தல் (விடய இல 28)
தனியார் துறை பணியாளர்களின் ஊதியத்தினை அதிகரிப்பது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாக தொழில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்ரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, • தனியார் துறையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் மாதாந்த சம்பளத்தை ரூ. 10,000 ஆக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆகக் குறைந்த நாள் சம்பளம் ரூ. 400 ஆகும். • 2015 மே மாதம் முதல் அது அடிப்படை சம்பளமாக கணிக்கப்படும். • தனியார் துறையினரின் சம்பளத்தை 2,500 ரூபாவால் அதிகரிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக 1,500 ரூபாவினை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறை படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் படி ஒரு நாள் சம்பளமானது 60 ரூபாவால் அதிகரிக்கப்படும். • அதன் இரண்டாம் கட்ட சம்பள உயர்வு 2016-01-01 அன்று முதல் நiமுறைக்கு வரும். இதன் படி 2015-12-31 முதல் மேலும் 1000 ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்படும். இதன் படி நாள் சம்பளமானது மேலும் 40 ரூபாவால் அதிகரிக்கப்படும்.
10.´வேல்ட் எக்ஸ்போ - 2015´உலக வர்த்தக கண்காட்சி (விடய அல 30)
´வேர்ல் எக்ஸ்போ´ என பொதுவாக அழைக்கப்படும் உலக வர்த்தக கண்காட்சியானது, வருடாந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் நகரங்களில் வேறுபட்ட தொனிப் பொருளில் நடாத்தப்பட்டு வருகின்றது. ஆறு மாதங்களுக்காகன நிகழ்வாக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள அடுத்த வேர்ல்ட் எக்ஸ்போ வர்த்தக கண்காட்சியானது, இத்தாலி நாட்டின் மிலானோ நகரில் 2015 மே மாதம் 01 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதன் போது இலங்கை தொடர்பில் பிரதான நோக்கங்கள் இனங்காணப்பட்டுள்ளது. இலங்கையின் பெருமைகளை உலகிற்கு தெரியப்படுத்துவதுடன் உலகுடன் மிகச் சிறந்த தொடர்பினை ஏற்படுத்துதல், கவனத்தில் கொள்ளப்பட்ட ஒவ்வொரு சந்தைகளையும் மாதாந்த அடிப்படையில் துறை வாரியாக பண்டப் மதிப்பாய்வு செய்தல் மற்றும் இலங்கையின் பண்டப் பெயரினை மேலும் மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்குடன் இலங்கை குழு செயற்படும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் கௌரவ றிசாட் பதியுதீன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தப்பட்டது.
11.நீர் வழங்கல் மற்றும் சுக நலத்தினை அதிகரிக்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் (விடய இல 33)
முல்லைத்தீவு, கிளிநொச்சி, நுவரெலியா, பதுளை, மொனராகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்களின் குடி நீர் பிரச்சினையைத் தீர்த்தல், சுக நலத்தை விருத்தி செய்தல் மற்றும் தேசிய நிர் வழங்கல் திணைக்களத்தின் பணிகளை உறுதிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்கில் உலக வங்கியின் கடன் உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
12.தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட திருத்தம் (விடய இல 34)
2014.04.22 அன்று நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டதைப் போன்று குறித்த பிரிவினரின் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டதை தொடர்ந்து புதிய தேர்தல் முறை ஒன்றை அறிமுகம் செய்வது தொடர்பில் தயாரிக்கப்பட்ட திருத்தச் சட்ட மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் அமைச்சரவை அவதானத்திற்கு முன்வைக்கப்பட்டது. குறித்த சட்ட மூலம் தொடர்பில் மேலும் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்குமாறு அமைச்சர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.
0 comments:
Post a Comment