ஜெ.க்கு பிணை நீடிப்பு - கர்நாடக நீதிபதிக்கு மே 12 வரை அவகாசம்

ஜெ.க்கு பிணை நீடிப்பு - கர்நாடக நீதிபதிக்கு மே 12 வரை அவகாசம்தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டில் தீர்ப்பு வழங்க, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மே 12ம் திகதி வரை கால அவகாசம் வழங்கி இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பவானி சிங்கை நீக்கக் கோரும் திமுக மனு பேரமர்வுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், கர்நாட உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு கூற கூடுதல் அவகாசம் கோர சட்டப்பூர்வமாக அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி விசாரித்தார். 

இவ்வழக்கில் குற்றவாளிகள் மற்றும் அரசு தரப்பு வாதம் நிறைவடைந்ததால் திகதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச் செயலாள‌ர் அன்பழகன் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர். பானுமதி அடங்கிய அமர்வு, சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டில் ஏப்ரல் 15-ம் திகதி வரை கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க தடைவிதித்தது. 

இந்த நிலையில் நீதிபதி குமாரசாமி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அதில், உச்ச நீதிமன்றம் விதித்த கால அவகாசத்துக்குள் தீர்ப்பு வழங்க இயலாததால் வருகிற 30-ம் திகதிவரை கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்´´ என கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகின. 

அதற்கேற்ப, சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டில் தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு மே 12ம் திகதி வரை கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதேவேளை, சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் மே 12ம் திகதி வரை பிணை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த ஆண்டு அக்டோபர் 27-ம் திகதி பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி’குன்ஹா ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் தலா 4 ஆண்டு காலம் சிறையும், ரூ.10 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டார். அன்றைய தினமே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 18-ம் திகதி இடைக்கால பிணை வழங்கப்பட்டது. பின்னர் அது மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்ட்டது. 

சொத்துக் குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணை முடிவுற்று நிலையில், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பிணை ஏப்ரல் 18-டன் (நாளை) முடிவடைகிறது. 

பிணையை நீட்டிக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் மே 12 வரை பிணையை நீட்டித்து உத்தரவிட்டனர். 
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment