சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தவையடுத்து கர்நாடக அரசு இன்று எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்றும், அவரது வாதத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்றும் சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அறிவித்துள்ளது. அதற்கு பதில் கர்நாடக மாநில அரசும், அன்பழகன் தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி குமாரசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கு வசதியாக நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) அன்பழகனும், கர்நாடக மாநில அரசும் தங்கள் வாதத்தை எழுத்துப்பூர்வமாக கொடுக்க வேண்டும் என்று நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவிட்டார். இந்த எழுத்து வாதம் 90 பக்கங்களுக்கு அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்தார்.
3 நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பு வெளியிட்ட அடுத்த 45 நிமிடங்களுக்குள் கர்நாடகா ஐகோர்ட்டு பதிவாளரிடம் அன்பழகனின் வக்கீல் குமரேசன் எழுத்து வாதத்தை தாக்கல் செய்தார். அந்த எழுத்துப்பூர்வ வாதம் 81 பக்கங்களில் உள்ளது.
இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பிவி ஆச்சார்யாவை நியமித்து கர்நாடக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசு உதவி வழக்கறிஞராக சவுந்த் சவுட்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து அரசு தரப்பின் எழுத்துப்பூர்வ வாதம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. 18 பக்கங்கள் கொண்ட இந்த வாதத்தை கர்நாடகா ஐகோர்ட்டு பதிவாளரிடம் அரசு வழக்கறிஞர் ஆச்சர்யா தாக்கல் செய்தார்.
இந்த எழுத்துப்பூர்வ வாதங்களை அடிப்படையாகக் கொண்டு நீதிபதி குமாரசாமி இறுதி தீர்ப்பை விரைவில் வழங்க உள்ளார்.
0 comments:
Post a Comment