மாற்றம் என்ற சொல்லைத் தவிர அனைத்துமே மாறும் என்பது ஒரு தத்துவம். இலங்கையில் நடந்தி ருக்கின்ற மாற்றமும் சுபிட்சமும் பரிணாம மாற்றமோ பிரளயமோ அல்ல. மக்கள் மனங்களில் ஏற்பட்ட எழுச்சியின் வெளிப்பாடே இந்த மாற்றமும் மகிழ்ச்சியுமாகும்.
மக்களை முட்டாள்களாக்கி இனவாத அரசொன்றை தொடர்வதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு வகுத்த பொறிமுறைகள் யாவும் மக்கள் சக்தியால் உடைத்தெறி யப்பட்டு மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஜனநாயகத்தினை முழுமையாக வெளிப்படுத்தும் நல்லாட்சிக்கான புதிய அரசாங்கம் உதயமாகியிருக்கிறது.
மக்களுக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 100 நாள் வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தி வரும் இந்த அரசாங்கம், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளையும் மக்களின் எதிர்பார்ப் புக்களையும் மிகவும் திருப்திகரமாகவே முன்னெடுத்து வருகிற தென்பது மகிழ்ச்சிக்குரிய விடயம்.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தினமும் விலை அதிகரிப்பையும் கட்டண உயர்வையுமே சந்தித்து அதிர்ச்சியில் இருந்த மக்களுக்கு இப்போது தினமும் ஆனந்தம்.
எரிபொருட்களின் விலைக்குறைப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலைக்குறைப்பு, தனியார் பஸ் கட்டணங்களின் குறைப்பு என்ற அறிவிப்புக்களைக் கேட்டதும் மக்கள் ஆனந்தப் பெருமூச்சு விடுவதையே காண முடிகிறது.
சரியாகத் திட்டமிடப்படாத பொருளாதார நிலை காரணமாக மக்கள் மீது சுமைகளை ஏற்றி ஆட்சியைத் தக்க வைப்பதிலேயே முன்னைய ஆட்சியாளர்கள் பெரும் குறியாக இருந்தனர். தங்களது குடும்பத்தினரையும், சகோதரர்களையும் ஆட்சி பீடத்தில் வைப்பதற்காக பொருளாதாரத்தையும் நிலையற்றதொரு நிலைக்கு கொண்டு சென்ற பெருமை மஹிந்த ராஜபக்ஷவையே சாரும். அரசியல், பொருளாதார விடயங்களில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரிகள் அந்த அரசில் இருந்தும், ராஜபக்ஷ குடும்பத்தின் தன்னலம் சார்ந்த திட்டமிடலுக்குத் துதிபாடுபவர்களாகவே இருந்தார்கள்.
கடந்த அரசின் நிலையற்ற பொருளாதாரக் கொள்கையினால் உண்டான அதிகரித்த வரிச்சுமை மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் இயல்பு நிலையையும் வெகுவாகப் பாதித்தது என்பது நாம் அனுபவித்த உண்மை.
என்னதான் பூசி மெழுகி மக்களை ஒரு மாயைக்குள் வைத்துக் கொண்டு ஆயுள் முழுவதும் ஆளலாம் என எண்ணி முன்னாள் ஜனாதிபதி திட்டமிட்டு செயற்பட்டாலும், எதற்கும் பொருளா தாரந்தான் அடிப்படை என்பதைப் புரிந்து கொள்ள அவரின் மமதை இடம் கொடுக்கவில்லை.
இந்த அரசு தனது 100 நாள் வேலைத் திட்டத்தில் மக்களின் வாழ்க்கைச் சுமைகளைக் குறைக்கும் பல்வேறு வேலைத் திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது. எரிபொருட்களின் விலைகள் கடந்தவாரம் குறைக்கப்பட்டதும் நாட்டு மக்கள் அனைவரினதும் உள்ளம் பூரித்தது. எரிபொருட்களின் விலைகளில்தான் சகல பொருட்களின் விலைகளும் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த முதற்படி, நாட்டின் எதிர்காலத்திற்கு கட்டியம்கூறி நிற்கின்றது.
எரிபொருட்களின் விலை குறைப்பு செய்யப்பட்ட அடுத்த நாளே, தனியார் பஸ் கட்டணங்களை ஏழு வீதத்தினால் குறைக்க முடியுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.
இது நல்லதொரு சகுனமாகும். எப்போதும், பஸ் கட்டண குறைப்பு விடயத்தில் முரண்டு பிடிக்கும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர், நல்லாட்சிக் காலத்தில் இப்படிக் கைகொடுப்பது அரசின் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களுக்கு மேலும் பலம் சேர்ப்பதாகவே இருக்கிறது.
இந்த அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கம் பொற்றுப்பேற்று 20 நாட்களுக்குள் பட்ஜட் தயாரிப்பதென்பது பெரும் சவாலான விடயமாகும். என்றாலும், வழங்கிய வாக்குறுதிகளை அமுல் படுத்தி வரும் இந்த அரசு, பொது மக்களுக்குச் சுமை ஏற்றாத வகையில் வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க எடுக்கும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. 20 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்திருக்கிறார்.
உண்மையில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐ. ம. சு. மு. அரசாங்க காலத்தில் வீண் விரயங்களும் ஊழல், மோசடிகளும் எண்ணில் அடங்காதவை. இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் பதிவாகி யிருக்கின்றன. இப்படியான மோசடிகளை நிறுத்துவதன் மூலம் கிடைக்கும் இலாபத்தைக் கொண்டே மக்களுக்கு போதியளவு நிவாரணம் வழங்கக் கூடியதாக இருக்குமென பொருளியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்த இடைக்கால பட்ஜட்டில் அரசு உறுதியளித்ததன்படி, அரசாங்க சேவையாளர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப் படுவது உறுதியாகிவிட்டது. என்றாலும், பெரும்பாலான தொழிலா ளர்கள் தனியார் துறைகளில் வேலை செய்கின்றனர். இவர்களு டைய நலனையும் நிதியமைச்சர் நன்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
பதவியில் இருந்த அரசாங்கங்கள் ஒவ்வொரு வரவு செலவும் திட்டங்களைச் சமர்ப்பிக்கும் போதும் அரச சேவை யாளர்களுக்கென கொடுப்பனவு அதிகரிப்புகளை வழங்கினாலும் தனியார் துறை ஊழியர்கள், அரசசார்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் வரைய றைகளை வழங்கி சம்பள அதிகரிப்புகள் செய்யப்படுவதில்லை.
இதுவரையும் இந்த நடைமுறை தான் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஆகவே இந்த அரசு இந்த விடயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும். இந்த நாட்டின் பொருளாதார சுபீட்சத்துக்கு தனியார் துறையினரின் பங்களிப்பு கணிசமானளவு இருக்கிறது. 100 நாள் வேலைத்திட்டம் சகல மக்களுக்கும் நிவாரணம் வழங்கும் சுபிட்ச திட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

0 comments:
Post a Comment