இதேவேளை இம்முறை நடைபெற வுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வரலாறு காணாத வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை யகமான சிறிகொத்தவில் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதியை போட்டியிடச் செய்வதற்கு பல கட்சிகள் முயற்சி செய்து வருகின்றன. அவ்வாறு மஹிந்த போட்டியிட்டால் 160 ஆசனங்களில் 89 ஆசனங்களை அவர் பெறுவார் என்று கூறப்படுகின்றது. இது ஐக்கிய தேசியக்கட்சிக்கு சவாலாக அமையாதா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கபீர் ஹாசிம்,
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நாம் தோல்வியடைவோம் என்று பலர் கூறினர். குறிப்பாக ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியடையும் என்றும் மஹிந்த அரசாங்கத்தை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
நாம் அவர்களுக்கு மக்களின் வாக்குகளின் மூலம் பதில் கொடுத்துள்ளோம். அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பி நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளோம்.
ஆகவே, எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் வெற்றிபெறுவது நிச்சயம். ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு சவாலாக இருந்த மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம். அவ்வாறான நிலையில் இந்தத் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு அவர் ஒரு சவால் அல்ல. ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு இலஞ்சம், சலுகைகள் வழங்கி வாக்குகளைப் பெற்றது மாத்திரமின்றி மக்களை அச்சுறுத்தி தொடர்ந்து இந்நாட்டில் அராஜக ஆட்சி புரியலாமென்று நினைத்தனர்.
அவற்றுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளமை தற்போது வெளிச்சமாகியுள்ளது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகள் கிடைத்தன. ஒரு சில தேர்தல் தொகுதிகளில் சொற்ப வாக்கு வித்தியாசத்திலே தோல்வியடைந்தோம். இம்முறை அந்தப் பிரதேசங்களிலும் வெற்றி பெறும் வகையில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
0 comments:
Post a Comment