புதுடில்லி: டில்லி தேர்தல் முடிவுகள் குறித்து வெளிப்படையாக விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் என கட்சியின் மூத்த தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா கட்டளையிட்டுள்ளார்.டில்லியில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியால், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, வரலாறு காணாத வகையில், 70 இடங்களில் 67 ஐ பெற்று ஆட்சியமைக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் இந்த படுதோல்வி, கட்சியினரிடையே பெரும் விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
டில்லி தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரம் வலிமையாக இல்லை. கடந்த 15 ஆண்டுகளாக டில்லியில் காங்கிரஸ் கட்சி செய்த சாதனைகள் பட்டியலிடப்படவில்லை. மேலும், தேர்தல் பிரசாரத்திற்கு என்னை கூப்பிடவும் இல்லை. இதனால் தான் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோற்றுவிட்டது. அவர்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் டில்லி பொறுப்பாளர் பி.சி. சாக்கோ, தேர்தல் முடிவுகள் குறித்து கட்சியின் தலைவர் சோனியாவிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவரிடம் ஷீலா தீட்சித் கருத்து குறித்து சோனியா கடுமை காட்டியதாக தெரிகிறது. கட்சியின் தோல்வி குறித்து இவ்வாறு வெளிப்படையாக விமர்சனம் செய்வதை, மூத்த தலைவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடுமையாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment