தேர்தல் மறுசீரமைப்பானது, விகிதாசார தேர்தல் முறையும் தொகுதிவாரி தேர்தல் முறையும் சேர்ந்ததொரு கலப்பு தேர்தல் முறையாக அமையுமெனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறினார்.
மறுசீரமைக்கப்படவுள்ள இந்த கலப்பு தேர்தல் முறையின் கீழ் ஆசனங்களின் எண்ணிக்கை, ஆசனங்களுக்கான உறுப் பினர்களின் எண்ணிக்கை வேறுபடுகின்ற போதும் தேர்தல் முடிவுகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரவை முடிவுகளை தெரிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய கலப்பு தேர்தல் முறை மூலம் ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒரு உறுப்பினர் என்ற வகையில் தெரிவு செய்யப்படுவரெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்படுமென ஜனாதிபதி தேர்தலின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மறுசீரமைப்புக்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்கும் பணியை ஜனாதிபதி, தேர்தல்கள் ஆணையாளர், நில அளவையாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதற்கமைய தேர்தல் மறுசீரமைப்புக்கான ஏற்பாடுகளை ஓரிரு வாரங்களுக்குள் பூர்த்தி செய்வதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய வாக்குறுதியளித்து ள்ளதாகவும் அமைச்சர் ராஜித்த கூறினார். இதேவேளை அரசியலமைப்புக்கான திருத்தங்கள் பூர்த்தி அடைந்துள்ளதோடு ஆணைக்குழுக்கள் தொடர்பான திருத்த யோசனைகள் இன்னும் ஒரு மாதத்தினுள் முடிவடைந்து விடுமெனவும் அவர் தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக புதிய தேர்தல் மறுசீரமைப்பினை அமைச்சரவை அங்கீகரிக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அறிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் தேர்தல் மறுசீரமைப்புக்களை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தீர்மானங்களிலும் மிகவும் நல்லதொரு மறுசீரமைப்பு முறையே அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் நாட்டில் வாழும் அனைத்து சிறுபான்மை இனத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையிலேயே விகிதாசார தேர்தல் முறையுடன் தொகுதிவாரி தேர்தல் முறை சேர்ந்ததான புதிய கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்த வுள்ளோமெனவும் அமைச்சர் ராஜித்த கூறினார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல்கள் ஆணையாளர் நில அளவையாளர் நாயகம் மற்றும் சட்டமா அதிபருடன் கூடி கலந்துரையாடியுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
செய்தியாளர் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேர்தல் மறுசீரமைப்பினை மாத்திரம் முன்னெடுப்பதனை விரும்புகின்ற போதும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த தேர்தல் மறுசீரமைப்பை அரசியலமைப்பு சீர்திருத்தமாக மேற்கொள்ள வேண்டுமெனவும் கூறி வருகிறார். எது எவ்வாறானாலும் புதிய மறுசீரமைக்கப்பட்ட கலப்பு தேர்தல் முறை விரைவில் நடைமுறைக்கு வந்தால் மிகவும் பயனுடையதாக இருக்குமென்பதே எனது தனிப்பட்ட கருத்து என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment